மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக திகழ்வது குடிநீர். குறிப்பாக, பயணங்கள், அலுவலகங்கள், வீடுகள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் பாட்டில் குடிநீரை மக்கள் நம்பி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் பிரபலமான பாட்டில் குடிநீர் நிறுவனங்களில் ஒன்றான பிஸ்லெரி (Bisleri International Pvt Ltd) நிறுவனத்தின் குடிநீர் மாதிரி ஆய்வக சோதனையில் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பிஸ்லெரி நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுத்து வழக்கு தொடர இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI அனுமதி வழங்கியுள்ளது.

பிஸ்லெரி நிறுவனத்தின் வளாகத்தில் இருந்து, மினரல் வாட்டர் அல்லாத பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் மாதிரியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். முதற்கட்ட ஆய்வில், குடிநீரில் இருக்க வேண்டிய புரோமேட் (Bromate) அளவு நிர்ணயிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புக்கு உட்படவில்லை என்பது தெரியவந்ததாக FSSAI தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த குடிநீர் மாதிரி உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ன் கீழ் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட ஆய்வு முடிவை எதிர்த்து பிஸ்லெரி நிறுவனம் மேல்முறையீடு செய்ததை தொடர்ந்து, அந்த குடிநீர் மாதிரி மேல்நிலை ஆய்வுக்காக பரிந்துரைக்கப்பட்ட உணவு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட மறுபரிசோதனையில், பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) எனப்படும் வேதிப்பொருட்கள் கண்டறியப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலும் அந்த மாதிரி பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டதாகவும் FSSAI தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாகவே நிறுவனத்தின் மீது வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரத்தில் நிறுவனத்தின் தரப்பிலான விளக்கமும் முக்கியத்துவம் பெறுகிறது. பிஸ்லெரி நிறுவனம் கோவாவில் உள்ள தனது ஆலையில் எடுக்கப்பட்ட மாதிரியில் புரோமேட் அளவு லிட்டருக்கு 12 மைக்ரோகிராம் இருந்ததாகவும், இது நிர்ணயிக்கப்பட்ட 10 மைக்ரோகிராம் வரம்பை விட அதிகம் என்றும் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில், நிறுவனம் தனியாக மேற்கொண்ட ஆய்வுகளில் பாதுகாப்பு வரம்புக்குள் முடிவுகள் கிடைத்ததாகவும் கூறியுள்ளது. 

குடிநீர் என்பது விற்பனை பொருள் மட்டுமல்ல; அது மக்களின் அடிப்படை தேவையும், ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையதுமாகும். பிரபலமான நிறுவனங்களின் தயாரிப்புகளாக இருந்தாலும், அவற்றின் தரம் குறித்து சந்தேகம் எழும்போது உரிய ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது. குறிப்பாக, பாட்டில் குடிநீரின் உற்பத்தி, சுத்திகரிப்பு, தர பரிசோதனை, சேமிப்பு மற்றும் விநியோகம் ஆகிய அனைத்து நிலைகளிலும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.

FSSAI அனுமதி வழங்கியிருப்பதை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ன் கீழ் பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மீது வழக்கு தொடருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், பிஸ்லெரி நிறுவனத்தின் பிற குடிநீர் மாதிரிகளையும், மற்ற நிறுவனங்களின் பாட்டில் குடிநீர் மாதிரிகளையும் கூடுதலாக பரிசோதிக்க உணவு பாதுகாப்பு அமைப்பு திட்டமிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது. 

மக்கள் நம்பிக்கையுடன் வாங்கி பயன்படுத்தும் பாட்டில் குடிநீரின் தரத்திலேயே கேள்வி எழுந்திருப்பது சாதாரணமான விஷயமல்ல. பிரபலமான நிறுவனமாக இருந்தாலும் சட்டத்திற்கு மேலானவர்கள் யாருமில்லை என்பதை இந்த நடவடிக்கை உணர்த்துகிறது. குடிநீரின் தரம் என்பது வணிகத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் விஷயம் மட்டுமல்ல; கோடிக்கணக்கான மக்களின் உடல்நலத்தையும் உயிரையும் தீர்மானிக்கும் முக்கியமான அம்சமாகும்.
0
0
0
0
0
0