தங்க நகை வாங்கும் மக்களே உஷார்! ஹால்மார்க் முத்திரை இருந்தாலும் தங்கத்தின் உண்மையான தரம் என்ன என்ற கேள்வியை எழுப்பியுள்ள புதிய அதிர்ச்சித் தகவல்!

தங்கம் என்பது இந்தியக் குடும்பங்களை பொறுத்தவரை வெறும் ஆபரணம் மட்டுமல்ல; அது ஒரு சேமிப்பு, அவசர காலத்தில் கைகொடுக்கும் சொத்து, பெண்களின் வாழ்நாள் முதலீடு. அப்படிப்பட்ட தங்கத்திலேயே நூதனமான கலப்பட மோசடி நடைபெறுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பத்திரிகை புலனாய்வில், தங்கத்துடன் ரீனியம் (Rhenium) என்ற அரிய உலோகத்தின் பொடியை கலந்து அதன் எடையை அதிகரிக்கும் முறை குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரீனியம் என்பது அதிக அடர்த்தி கொண்ட அரிய உலோகம். இதன் அடர்த்தி தங்கத்தைவிட அதிகம். இதனால் தங்கத்துடன் இதை கலக்கும்போது, உண்மையான தங்கத்தின் அளவு அதிகரிக்காமல் ஒட்டுமொத்த எடையை அதிகரிக்க முடியும் என்று அந்த புலனாய்வு சோதனை தெரிவிக்கிறது.

புலனாய்வில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஒரு சோதனையில், 7.83 கிராம் 24 காரட் சுத்த தங்கத்துடன் ஒரு கிராம் ரீனியம் பொடி கலக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 22 காரட் நகையாக மாற்றுவதற்காக வேறு உலோகங்களும் சேர்க்கப்பட்டு, இறுதியில் 9.58 கிராம் எடையுள்ள நகை தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நகை பல்வேறு சோதனை மையங்களிலும் நகைக்கடைகளிலும் பரிசோதிக்கப்பட்டபோது 22 காரட் தங்கம் என அடையாளம் காணப்பட்டதாகவும், 916 ஹால்மார்க் முத்திரையும் வழங்கப்பட்டதாகவும் புலனாய்வு செய்தி தெரிவிக்கிறது.

9.58 கிராம் எடையுள்ள அந்த நகையில் உண்மையான தங்கத்தின் அளவு சுமார் 7.83 கிராம் மட்டுமே. அதாவது சுமார் 81.7 சதவீதம் தங்கம் மட்டுமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது ஏறத்தாழ 20 காரட் தங்கத்தின் தரத்திற்கு சமம். ஆனால் 22 காரட் 916 தங்கம் என விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக நகைக்கடைகளில் தங்கத்தின் தரத்தை அறிய XRF எனப்படும் எக்ஸ்-ரே ஃப்ளூரசன்ஸ் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் ஜோத்பூரில் நடத்தப்பட்டதாக கூறப்படும் சோதனையில் சில கருவிகள் ரீனியம் கலந்திருப்பதை கண்டறிய தவறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வழக்கமான சோதனைகளை மட்டுமே நம்பி தங்கத்தின் தரத்தை உறுதி செய்வது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

இருப்பினும் எல்லா இயந்திரங்களாலும் ரீனியத்தை கண்டறிய முடியாது என்பது உண்மையல்ல. சரியான ஆய்வக முறைகளைக் கொண்டு இதைக் கண்டறிய முடியும். ஒருவர் தனது வாழ்நாள் சேமிப்பில் நான்கு பவுன் தங்க நகை வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நகை 22 காரட் என்று நம்பி பணம் செலுத்திய பிறகு, அதில் உண்மையான தங்கத்தின் அளவு குறைவாக இருப்பது தெரியவந்தால் அவருக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும்.

மேலும், அவசர தேவைக்காக அந்த நகையை அடமானம் வைக்கவோ அல்லது விற்பனை செய்யவோ செல்லும்போது அதன் உண்மையான தரம் வெளிப்பட்டால் கூடுதல் சிக்கல்கள் ஏற்படலாம்.

1. BIS அங்கீகாரம் பெற்ற ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை மட்டுமே வாங்குங்கள்.
2. ஆறு இலக்க HUID எண்ணை BIS Care செயலியில் சரிபாருங்கள்.
3. நகையின் எடை, காரட் மற்றும் விலை குறிப்பிடப்பட்ட GST ரசீதை பெற்றுக்கொள்ளுங்கள்.
4. சந்தேகம் இருந்தால் BIS அங்கீகாரம் பெற்ற Assaying and Hallmarking Centre-ல் உரிய ஆய்வக பரிசோதனை செய்யுங்கள்.
5. XRF சோதனை மட்டும் நகையின் உட்புறம் முழுவதிலும் உள்ள உலோக கலவையை உறுதி செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தர நிர்ணய அமைப்பான BIS கூடுதல் கண்காணிப்பு மற்றும் சோதனை முறைகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. நகை தொழில் அமைப்புகளும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றன.

தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் ஹால்மார்க் நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை உடனடியாகக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். கலப்படம் செய்வோர், அதற்கு உடந்தையாக இருப்போர் மற்றும் போலியான தரச் சான்றிதழ் வழங்குவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தங்கம் வாங்குவது என்பது பல குடும்பங்களின் பல ஆண்டு உழைப்பில் உருவான சேமிப்பை முதலீடு செய்வதாகும். அந்த நம்பிக்கையை சிதைக்கும் எந்தவொரு கலப்படத்தையும் அனுமதிக்க கூடாது. ஹால்மார்க் முத்திரை இருக்கிறது என்பதற்காக மட்டுமே கண்மூடித்தனமாக நம்பிவிட முடியாத சூழல் உருவாகியுள்ளதா என்ற கேள்வியை இந்த புலனாய்வு எழுப்பியுள்ளது.

மக்களின் சேமிப்பை பாதுகாப்பது யார்? தங்கத்தின் தூய்மைக்கு உத்தரவாதம் அளிப்பது யார்? இந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவான பதிலளிக்க வேண்டிய நேரம் இது!
0
0
0
0
0
0