தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர்வரத்து குறைவு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது பயிர்களைக் காப்பாற்றுவதற்காக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் காவிரி நீர் இந்த ஆண்டு உரிய காலத்தில் திறக்கப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. பின்னர் செப்டம்பர் 1-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டபோதிலும், கடைமடை பகுதிகளுக்கு போதிய அளவு தண்ணீர் சென்றடையவில்லை. இதனை தொடர்ந்து வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யாததுடன், காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளிலும் நீர்வரத்து இல்லாததால் நெற்பயிர்கள் வாடத் தொடங்கின.
தஞ்சாவூர் அருகே உள்ள நல்லவன்னியன்குடிகாடு, சங்கரதேவன்குடிகாடு, மலையர்நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் சம்பா பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன. பல இடங்களில் விவசாய நிலங்கள் வெடித்து, பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கான வழியின்றி தவிக்கும் விவசாயிகள், அருகிலுள்ள குளம், குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரைக் குடங்களில் எடுத்துச் சென்று பயிர்களுக்கு ஊற்றி வருகின்றனர். சில விவசாயிகள் ஆறுகளில் தேங்கியுள்ள தண்ணீரை டீசல் மோட்டார்கள் மூலம் இறைத்து வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.
தஞ்சாவூர் அருகே கண்டிதம்பட்டு பகுதியில் டீசல் இன்ஜின் வாடகைக்கு கூட பணம் இல்லாத விவசாயிகள், கல்லணை கால்வாயில் தேங்கியுள்ள தண்ணீரை ஹோஸ் பைப் மூலம் வயல்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீரை பாய்ச்சுவதற்காக பைப்பில் உள்ள காற்றை வாயால் உறிஞ்சும் நிலைக்கும் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகள், சம்பா சாகுபடியையாவது காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை செலவு செய்துள்ள நிலையில், தற்போது பயிர்கள் காய்ந்து வருவதால் முதலீடு முழுவதும் வீணாகிவிடுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா - தாளடி சாகுபடிக்கு 3.12 லட்சம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சுமார் 1.90 லட்சம் ஏக்கரில் மட்டுமே நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகச் செய்தி தெரிவிக்கிறது. தண்ணீரின்றி பாதிக்கப்பட்டுள்ள சம்பா பயிர்களை வேளாண்மை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, பாதிப்புகளை முறையாகக் கணக்கிட வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்குத் தேவையான தண்ணீரை முறையாக வழங்குவதற்கும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்றுவதற்கும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரமே இன்று தண்ணீரின்றித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பயிர்களைக் காப்பாற்ற குடங்களில் தண்ணீர் சுமந்து செல்லும் விவசாயிகளின் வேதனைக்கு அரசு விரைந்து தீர்வு காணுமா என்பதே டெல்டா மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
