கும்பகோணத்தில் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகாமகம் திருவிழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் தங்குமிட வசதிகளை அதிகரிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மகாமகம் திருவிழாவின்போது கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பக்தர்களுக்கு தேவையான தங்குமிட வசதிகளை முன்கூட்டியே உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்களது வீடுகள் அல்லது விடுதிகளில் 'Bed and Breakfast' மற்றும் 'Homestay' முறையில் விருந்தோம்பல் மற்றும் தங்கும் சேவைகளை வழங்கி வருபவர்கள், புதிதாக இத்தகைய சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ள உரிமையாளர்கள் ஆகியோர் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் உரிமம் பெற விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்காக, சேவை வழங்க விரும்பும் உரிமையாளர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tntourismtors.com என்ற முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், பதிவு செய்வது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை பெற தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலரை 91769 95873 என்ற அலைபேசி எண்ணிலோ அல்லது tntotnj@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் ஆர். ரேவதி தெரிவித்துள்ளார்.
மகாமகம் திருவிழாவிற்கு இன்னும் கால அவகாசம் உள்ள நிலையில், பக்தர்களின் தங்குமிட தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, உள்ளூர் மக்களுக்கும் விருந்தோம்பல் சேவை மூலம் வருமான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
