கும்பகோணம் மாநகராட்சி ஸ்ரீ நகர் காலனி பகுதியில் அமைந்துள்ள மண்டலம் 2-க்கான அலுவலகம், கடந்த மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் பூட்டியே கிடந்தது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட அலுவலகமே பல மாதங்களாக செயல்படாமல் பூட்டிக் கிடப்பது ஏன் என்ற கேள்வி அப்பகுதி மக்களிடையே எழுந்தது.



இதுகுறித்து பொதுமக்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் அவர்களிடம் புகார் தெரிவித்தனர். பொதுமக்களின் புகாரை தொடர்ந்து, அமைச்சர் ர.வினோத் இன்று ஸ்ரீ நகர் காலனியில் அமைந்துள்ள மண்டலம் 2 அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, திறந்து வைக்கப்பட்ட அலுவலகம் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாதது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



மேலும், அலுவலக கட்டிடத்தின் பல்வேறு பகுதிகளில் சிதிலங்கள் ஏற்பட்டிருப்பதை கண்டு அதிருப்தி தெரிவித்த அமைச்சர், கட்டிடத்தின் தரம் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மக்களின் தேவைக்காக உருவாக்கப்பட்ட அலுவலகம் பயன்பாடின்றி பூட்டி கிடப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் மண்டல அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து முழுமையான செயல்பாட்டை தொடங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



மக்களின் புகாருக்கு உடனடியாக செவிசாய்த்து அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்திருப்பது அப்பகுதி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. திறப்பு விழாவுடன் நின்றுவிடாமல், மக்கள் பயன்பாட்டிற்கும் கட்டிடங்கள் வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு!

0
0
0
0
0
0