தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்து பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் அடுத்த மூப்பகோவில் பகுதியில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெடிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த விஜயபாண்டியன் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை செய்வதற்காக அப்பகுதியில் பெருமளவில் நாட்டு வெடிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 20 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
அனுமதியின்றி வெடிகள் தயாரித்தது மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வெடிபொருட்களை கையாண்டது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சட்டவிரோத செயலின் பின்னணியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? வெடிகள் யார் யாருக்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தன? என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பண்டிகை காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சட்டவிரோத வெடி தயாரிப்பு மற்றும் விற்பனையைத் தடுக்க போலீசார் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
