முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடர்பாக பேசப்படும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் மற்றும் பண பரிவர்த்தனை புகார் விவகாரத்தில், தற்போது பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியா பெயரும் கவனம் பெற்றுள்ளது.
ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, சண்முகப்பிரியா சென்னையை சேர்ந்த 52 வயது பெண் தொழிலதிபர். ஆடை மற்றும் ஜவுளி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆயத்த ஆடைகள் மொத்த விற்பனைத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் பெருங்குடி, நீலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் அவருக்குச் சொந்தமான வீடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. Aphrodite Drapes என்ற துணிக்கடை நிறுவனத்தையும் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதிகளை பெற்றுத் தருவதாக கூறி, பள்ளிகளிடம் இருந்து ரூ.100 கோடிக்கும் மேல் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பி.டி. அரசகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் உள்ளிட்டோரின் பெயர்களும் விசாரணையில் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கின் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணையின்போது சண்முகப்பிரியாவின் பெயரும் காவல்துறையின் கவனத்திற்கு வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. முத்துக்குமார் வழியாக அவருக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுவதாக நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
2026 அக்டோபர் 28ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சண்முகப்பிரியாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் பெருங்குடியில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் அடுக்குமாடிக் குடியிருப்பு, நீலாங்கரையில் உள்ள வீடு, அபிராமபுரம் மற்றும் பசுமைவழிச் சாலை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்த சோதனைகளின்போது வங்கி பரிவர்த்தனை விவரங்கள், சொத்து ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த 'ஏஞ்சல்' திரைப்படத்தில் சண்முகப்பிரியா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த படத்திற்காக அவருக்கு ரூ.25 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாகவும், இந்த திரைப்படம் 2018ஆம் ஆண்டு படப்பிடிப்ப தொடங்கிய நிலையில், அதன் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மத்தியில் எழும் முக்கியமான கேள்விகள்:
* சண்முகப்பிரியாவுக்கும் அன்பில் மகேஷுக்கும் இடையிலான தொடர்பு என்ன?
* முத்துக்குமார் வழியாக பண பரிவர்த்தனை நடைபெற்றதா?
* தனியார் பள்ளிகளிடம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் பணத்தில் சண்முகப்பிரியாவுக்கு தொடர்பு உள்ளதா?
* அவரது தொழில் நிறுவனங்கள் மற்றும் சொத்துகளின் மூலம் ஏதேனும் பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா?
* 'ஏஞ்சல்' திரைப்படத்தில் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் ரூ.25 லட்சம் சம்பளத்திற்கும் இந்த பண பரிவர்த்தனை புகாருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
சண்முகப்பிரியா வெறும் துணிக்கடை தொழிலதிபரா? அரசியல் வட்டார தொடர்புகள் கொண்டவரா? சினிமா துறையில் அவருக்கு இருந்த பங்களிப்பு என்ன? தனியார் பள்ளிகளின் அங்கீகார விவகாரத்தில் அவரது பெயர் இடம்பெற்றதற்கான உண்மையான காரணம் என்ன?
இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்க வேண்டுமானால், பண பரிவர்த்தனைகளின் ஆவணங்கள், நிறுவனங்களின் பின்னணி மற்றும் காவல்துறை விசாரணை விவரங்கள் வெளிவர வேண்டும்.
