கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகளுக்கு கும்பகோணத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள், சுற்றுலாவில் கோவில்களின் பங்களிப்பு, கோவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வழிமுறைகள், கோவில், கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளை வாசித்தல் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் கும்பகோணம் பாணாதுறை மேல்நிலைப்பள்ளி, நகர மேல்நிலைப்பள்ளி, சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நேட்டிவ் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 80 நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் 8 ஆசிரியர்கள், புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 30 மாணவிகள் மற்றும் 2 ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.



கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தின் நிறுவனத் தலைவர் கும்பகோணம் ஆ.கோபிநாத், நாகேஸ்வரன் கோவிலின் தொன்மையான கட்டடக்கலை, விமானத்தின் தனித்துவமான அமைப்பு, கோட்டங்கள் மற்றும் திருச்சுற்று மாளிகையில் உள்ள சிற்பங்களின் அமைப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். சிற்றுருவ இராமாயண சிற்பங்களின் நுணுக்கமான வேலைப்பாடுகளையும் எடுத்துரைத்தார்.



முதலாம் இராஜேந்திர சோழனின் 3-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்த செல்லப்பிரான் கல்வெட்டு, முதலாம் ஆதித்த சோழன், ஆதித்த கரிகாலன் மற்றும் மூன்றாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டுகளின் வாசகங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்கள் நேரடியாக கல்வெட்டுகளை வாசிக்கும் வகையிலும் பயிற்சி அளிக்கப்பட்டது.



இதனிடையே, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்த ‘Selfie With Kumbakonam’ போட்டியில் சிறந்த புகைப்படங்களை அனுப்பிய பிரவீன் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தின் சார்பில் கோ.ஸ்ரீ வித்யா மற்றும் கார்த்திக் ஆகியோரும், பள்ளிகளின் சார்பில் அருண ராஜவேல், வினோத் சேவியர், பாலசுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன் மற்றும் ஜான்சி ஆகியோரும் செய்திருந்தனர்.

வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் கோவில்களின் கட்டடக்கலை குறித்து மாணவர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக அமைந்தது.
0
0
0
0
0
0