‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றுள்ள நடிகர் ரிஷிகாந்த், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘டோரதி’ திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரது தோற்றத்தில் ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாகக் கூறி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அவரை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது 38-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரிஷிகாந்துக்கு ‘மொத ராத்திரி’ படத்தின் இயக்குநர் ராஜா கருப்பசாமி உணர்வுப்பூர்வமான வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
“அவரை ஹீரோவாக நம்பினேன்”
தனது பதிவில் ரிஷிகாந்துடனான 8 ஆண்டுகால பயணத்தை நினைவுகூர்ந்த இயக்குநர், உதவி இயக்குநராக இருந்த காலத்தில் ஒரு கதாபாத்திரத்திற்காக ரிஷிகாந்தை அணுகியதாக தெரிவித்துள்ளார்.
அப்போது சம்பளம் மட்டுமின்றி பயணச் செலவைக்கூட வழங்க முடியாத சூழலில், ரிஷிகாந்த் தனது ஸ்கூட்டியில் வந்து, சொந்த ஆடைகளையும் எடுத்துக்கொண்டு அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கிருந்துதான் இருவருக்கும் இடையிலான நட்பு தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளில் பல போராட்டங்கள், தனிப்பட்ட இழப்புகள் மற்றும் தோல்விகளை இருவரும் ஒன்றாகக் கடந்து வந்ததாகவும், பலமுறை சண்டை மற்றும் விவாதங்கள் ஏற்பட்டதாகவும் ராஜா கருப்பசாமி கூறியுள்ளார்.
“அவர் என்னை ஒரு இயக்குநராக நம்பினார். நான் அவரை ஒரு ஹீரோவாக நம்பினேன். அந்த நம்பிக்கைதான் எங்கள் இருவரையும் ‘மொத ராத்திரி’ வரை கொண்டு வந்து சேர்த்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
“ஒரு வருடத்திற்கு முன்பு அழுதுகொண்டிருந்தோம்”
இன்று திரையுலகம் தங்களை கொண்டாடி வரும் நிலையில், சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு சென்னை தேநீர் கடையில் அமர்ந்து தங்களது நிலையை நினைத்து வருத்தப்பட்டு, அழுதுகொண்டு அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்ததாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ரிஷிகாந்த் சந்தித்த போராட்டங்கள் மற்றும் அவமானங்களை தான் நேரில் பார்த்ததாகக் கூறிய அவர், தற்போது கிடைத்து வரும் பாராட்டுகளுக்கு அவர் முழுமையாக தகுதியானவர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த மனிதர் தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக வரப்போகிறார். ஒருநாள் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராகவே இருப்பார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை” என ரிஷிகாந்தை பாராட்டியுள்ளார்.
‘மொத ராத்திரி’ படத்தின் விளம்பரத்தை “யார் நீ?” என்ற கேள்வியுடன் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ள இயக்குநர், “இப்போது… மீதியெல்லாம் வரலாறு!” எனக் கூறி ரிஷிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
