2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாவது பதக்க நாளில் இந்தியா சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி 4 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ஷூட்டிங்கில் 3 பதக்கங்கள்

ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் குழுப் போட்டியில் ருத்ரங்ஷ் பட்டீல், ஹிமான்சு தில்லான், பார்த்த் மானே ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

தொடர்ந்து நடைபெற்ற தனிநபர் இறுதிப் போட்டியில் ஹிமான்சு தில்லான் வெள்ளிப் பதக்கமும், ருத்ரங்ஷ் பட்டீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதன் மூலம் ஒரே தனிநபர் போட்டியில் இரு இந்திய வீரர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

இந்தியாவின் 6 பதக்கங்களில் 5 பதக்கங்களை ஷூட்டிங் பிரிவு பெற்றுள்ளது.

MMA-வில் இந்தியாவுக்கு வரலாற்றுப் பதக்கம்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல்முறையாக இடம்பெற்றுள்ள கலப்பு தற்காப்புக் கலை (MMA) போட்டியில் இந்தியாவின் சூச்சிகா தரியல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

சிங்கப்பூரின் ஹூய் கூன் தியோவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டி சமனில் முடிந்த நிலையில், போட்டி விதிமுறைகளின் அடிப்படையில் எதிரணி வீராங்கனை இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதனால் சூச்சிகா தரியல் வெண்கலப் பதக்கத்துடன் போட்டியை நிறைவு செய்தார்.

ஹாக்கி, கபடி, பேட்மிண்டனில் வெற்றி

மகளிர் ஹாக்கியில் இந்தோனேசியாவை 17-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது. கபடியில் ஆண்கள் அணி ஜப்பானை 49-24 என்ற கணக்கிலும், பெண்கள் அணி வங்கதேசத்தை 42-21 என்ற கணக்கிலும் வென்றன.

டேபிள் டென்னிஸில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்திய நிலையில், ஆண்கள் பேட்மிண்டன் அணி வங்கதேசத்தை 3-0 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

நாளை தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இந்தியா

செப்டம்பர் 22-ம் தேதி காலை 10:30 மணிக்கு நடைபெறும் மகளிர் கிரிக்கெட் தங்கப் பதக்கப் போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.

மேலும், மகளிர் பேட்மிண்டன் காலிறுதி, 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிக்கான தகுதிச்சுற்று, ஆண்கள் கபடி, ஆண்கள் பேட்மிண்டன் மற்றும் ஆண்கள் ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளிலும் இந்திய வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
0
0
0
0
0
0