தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 22) தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் 15,454 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கூடுதலாக சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர். திட்ட விரிவாக்கத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.217.63 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உயர்ந்துள்ளது.
மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், பள்ளிக்கு வருகையை ஊக்குவித்தல் மற்றும் பசியின்றி கல்வியில் கவனம் செலுத்த உதவுதல் ஆகிய நோக்கங்களுடன் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு காலை உணவை வழங்கிய முதல்வர் விஜய், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இந்நிலையில், இடைத்தேர்தல் காரணமாக மாதிரி நடத்தை விதிகள் அமலில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும் இந்தத் திட்டத்தின் விரிவாக்கம் தற்போது செயல்படுத்தப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
