மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் நடிகர் ரன்வீர் சிங் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. மும்பையில் பிறந்த இந்தக் குழந்தை பெண் குழந்தை என தீபிகா படுகோனே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இத்தம்பதிக்கு ஏற்கனவே ‘துவா’ என்ற மகள் உள்ள நிலையில், தற்போது அவர்களது குடும்பத்தில் மற்றொரு பெண் குழந்தை இணைந்துள்ளது.

ஏப்ரலில் பகிரப்பட்ட கர்ப்ப செய்தி

தீபிகா படுகோனே இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தீபிகா மற்றும் ரன்வீர் சிங் தம்பதி சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அப்போது, அவர்களது மகள் துவா, கர்ப்பம் உறுதியானதைக் காட்டும் pregnancy kit-ஐ கையில் வைத்திருந்த புகைப்படத்தையும் தம்பதி பகிர்ந்திருந்தனர்.

மேலும், கர்ப்பகாலத்தின் முக்கியமான தருணங்களை பதிவு செய்யும் வகையில் எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்புகளையும் அவர்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

சித்தி விநாயகர் கோயிலில் தரிசனம்

குழந்தை பிறப்பதற்கு முன்னதாக, தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இருவரும் மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.

அவர்களுடன் ரன்வீர் சிங்கின் பெற்றோரும் கோயிலுக்கு வந்திருந்தனர்.

கோயிலில் தரிசனம் செய்த அடுத்த நாளே குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘துவா’ பிறப்பதற்கு முன்பும் கோயில் தரிசனம்

இதேபோன்ற ஒரு சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் நடந்துள்ளது.

2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி துவா பிறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, செப்டம்பர் 6-ஆம் தேதி தீபிகா மற்றும் ரன்வீர் சிங் தம்பதி சித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று வழிபட்டிருந்தனர்.

தற்போதும் குழந்தை பிறப்பதற்கு முன்னதாக அதே கோயிலுக்கு அவர்கள் சென்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

2018-ல் நடைபெற்ற திருமணம்

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் இருவரும் 2018-ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி இத்தாலியின் லேக் கோமோவில் திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களது திருமண நிகழ்வில் தீபிகாவின் கொங்கணி கலாச்சாரத்தையும், ரன்வீர் சிங்கின் சிந்தி பின்னணியையும் பிரதிபலிக்கும் வகையில் வெவ்வேறு திருமண சடங்குகள் நடைபெற்றன.

திருமணத்திற்குப் பிறகு திரையுலகில் தொடர்ந்து கவனம் பெற்ற இந்தத் தம்பதி, தற்போது இரண்டாவது பெண் குழந்தையை வரவேற்றுள்ள செய்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபிகா – ரன்வீர் தம்பதிக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
0
0
0
0
0
0