கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக, கோவை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட பி.என்.பாளையத்தில் 210 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள மழையளவு அறிக்கையின்படி, செப்டம்பர் 20 காலை 7.30 மணி முதல் செப்டம்பர் 21 காலை 7.30 மணி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

பி.என்.பாளையத்தில் 210 மி.மீ. மழை

இந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக பி.என்.பாளையத்தில் 210 மி.மீ. (21 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது. இங்கு அதி கனமழை பெய்துள்ளதாக அதிகாரப்பூர்வ மழையளவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக, பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட சிறுவாணி அடிவாரத்தில் 92 மி.மீ. மழையும், வால்பாறை தாலுகா சின்னக்கல்லாரில் 66 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இந்த இரு பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.

வால்பாறையிலும் தொடர் மழை

வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்துள்ளது.

வால்பாறை பிஏபி – 53 மி.மீ.
வால்பாறை தாலுகா அலுவலகம் – 50 மி.மீ.
சோலையாறு – 49 மி.மீ.
சின்கோனா – 40 மி.மீ.

மேலும், தொண்டாமுத்தூர் பிடிஓ அலுவலகத்தில் 3.5 மி.மீ., பில்லூர் அணையில் 3 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

போத்தனூர் மற்றும் ஆழியாறு பகுதிகளில் மிகக் குறைந்த அளவு மழை பதிவாகியுள்ளது.

பல முக்கிய பகுதிகளில் மழையில்லை

இதனிடையே கோவையின் சில முக்கியப் பகுதிகளில் மழைப்பொழிவு பதிவாகவில்லை.

பீளமேடு விமான நிலையம், மேட்டுப்பாளையம், அன்னூர், கோவை தெற்கு, சூலூர், மதுக்கரை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை ஆகிய பகுதிகளில் 0 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டம் முழுவதும் மொத்தமாக 570.30 மி.மீ. மழையும், சராசரியாக 24.80 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

காட்டாற்று வெள்ளம்போல் ஓடிய கழிவுநீர்

கனமழையின் தாக்கமாக பெரியநாயக்கன்பாளையம்–வீரபாண்டி சாலையில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

காட்டாற்று வெள்ளம்போல் வேகமாக நீர் சென்ற நிலையில், அதன் ஆபத்தை உணராமல் சிலர் வாகனங்களை இயக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட அப்பகுதியில் இருந்தவர்கள் பதற்றமடைந்து, வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்திய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கனமழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
0
0
0
0
0
0