சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று மாணவ, மாணவிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மிருதுளா மற்றும் ஜெயஸ்ரீ ஆகிய மாணவிகள் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், இன்று (செப்டம்பர் 18) நான்காம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர் ஹரிஷ் குமார் உயிரிழந்துள்ளார்.
ஹரிஷ் குமார் கடந்த நான்கு நாட்களாக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவ சிகிச்சை மையத்தில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வந்ததாகவும், இன்று அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் மாணவர்களுக்கு காய்ச்சல்?
அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கிப் படிக்கும் மேலும் பல மாணவர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் ஆரம்பத்தில் காய்ச்சலை சாதாரண பாதிப்பாகக் கருதி முறையான சிகிச்சை பெறாமல் இருந்ததாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏடிஎஸ் கொசுக்கள் பெருகாமல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொசு ஒழிப்பு பணிகள், மருந்து தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு, மாணவர்களின் உடல்நலனை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
