தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் புதிய தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கூடுதல் தலைமைச் செயலாளராகவும், பயிற்சித் துறை தலைவராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக உறுப்பினர்கள் இல்லாத நிலையில் செயல்பட்டு வந்த ஆணையத்திற்கு தற்போது புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் மின் பகிர்மான கழக இயக்குநர் ஏ.ஆர். மாஸ்கரனாஸ் உறுப்பினராகவும், ஏ. முத்துசாரதா சட்ட உறுப்பினராகவும் மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
ஆணையத்தின் சட்ட உறுப்பினராக இருந்த மோகன் கடந்த மார்ச் 9-ம் தேதி ஓய்வு பெற்றார். உறுப்பினர் வெங்கடேசன் ஜூன் 1-ம் தேதி பதவிக்காலத்தை நிறைவு செய்தார். இதனிடையே, ஆணையத்தின் ஒரே அதிகாரியாக செயல்பட்டு வந்த மணிவண்ணன் ஜூன் 19-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா ஜூன் 24-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது. ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டிக்காராமன் தலைமையிலான இக்குழு செப்டம்பர் 15-ம் தேதி கூடி, ஒவ்வொரு பதவிக்கும் தலா இரண்டு பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை அரசிடம் சமர்ப்பித்தது.
5 ஆண்டுகள் பதவிக்காலம்
மின்சாரக் கட்டணங்களை நிர்ணயம் செய்தல், மின் கொள்முதல் மற்றும் மின் கடத்தல் கட்டணங்களை முறைப்படுத்துதல், மின்சாரத் துறைக்கான விதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட முக்கிய பணிகளை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்கிறது. மேலும், மின்சாரத் துறை தொடர்பான வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளையும் வழங்குகிறது.
இந்நிலையில், ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், 5 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
