பாஜக மாநில பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கருப்பு எம். முருகானந்தம் உடனடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் மீது கட்சி பெண் நிர்வாகி ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளராக உள்ள திவ்யா சேஷாத்ரி, கருப்பு முருகானந்தம் மீது உடல் ரீதியான தாக்குதல், மனரீதியான துன்புறுத்தல், மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியின் தேசியத் தலைமையிடம் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, கருப்பு முருகானந்தத்தை கட்சிப் பொறுப்புகளில் இருந்து உடனடியாக விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.


இதனிடையே, தமக்கு எதிரான புகார் குறித்து தனக்கு முழுமையான தகவல் தெரியவில்லை என்று கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் விவரங்களை அறிந்த பின்னர் விளக்கம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
