தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 17) கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
செப்டம்பர் 17-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மிதமான மழையும், தமிழகத்தின் ஏனைய பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு
செப்டம்பர் 18-ம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கும், செப்டம்பர் 19-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 மற்றும் 21-ம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 22 மற்றும் 23-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
