‘விடுதலை’, ‘கொட்டுக்காளி’, ‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், வெற்றிமாறன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படும் நிலையில், ‘மண்டாடி’ படத்தின் வெற்றிவிழா நேற்று (செப்.17) நடைபெற்றது.
“மக்கள் அவரை அவர்களில் ஒருவராக பார்க்கிறார்கள்”
விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், சூரியின் திரைப்பயணம் குறித்து பாராட்டிப் பேசினார்.
“முதல் படத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் இருந்தவர் இன்று இந்த இடத்தை எட்டியிருக்கிறார். சூரியின் பயணத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அவரை நம் வீட்டு பையன் என்று நினைக்கிறார்கள். மக்கள் அவரை அவர்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள்.
சூரி ஜெயிப்பதை தங்கள் வீட்டில் ஒருவர் ஜெயிப்பதாக நினைத்து மக்கள் கொண்டாடுகிறார்கள். இது அவருக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கிறது. அவரிடம் இருக்கும் வெகுளித்தனத்தை அவர் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு எப்போதும் இருக்கும்” என வெற்றிமாறன் தெரிவித்தார்.
சூரியின் வளர்ச்சியையும், ரசிகர்களுடனான அவரது நெருக்கத்தையும் வெற்றிமாறன் பாராட்டிப் பேசிய இந்த கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
