தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திர ஜோடியான சூர்யா – ஜோதிகா, தங்களது 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். வெளிநாட்டில், தங்களது குழந்தைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

1999ஆம் ஆண்டு வெளியான ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தில் முதன்முறையாக இணைந்து நடித்த சூர்யா – ஜோதிகா, தொடர்ந்து ‘காக்க காக்க’, ‘பேரழகன்’, ‘மாயாவி’, ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்தனர். ‘காக்க காக்க’ படப்பிடிப்பின்போது அவர்களது நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இருவீட்டாரின் சம்மதத்துடன் 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி சூர்யா – ஜோதிகா திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த முக்கியமான தருணத்தை இருவரும் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, குழந்தைகள் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமண உறுதிமொழிகளை புதுப்பித்துள்ளனர். இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி மற்றும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘தொடர்ச்சி’ (The Sequel) என்ற பெயரில் திருமண உறுதிமொழி புதுப்பித்தல் குறித்த வீடியோவையும் இருவரும் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜோதிகா தனது சமூக வலைதளப் பதிவில், 20 ஆண்டுகால தங்களது காதல், சண்டைகள், விட்டுக்கொடுத்தல்கள், புரிதல், தியாகம் மற்றும் சுயநலமற்ற அன்பை கொண்டாடும் விதமாக திருமண உறுதிமொழிகளை மீண்டும் புதுப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மகிழ்ச்சியாக இருப்பது, வாழ்க்கையை கொண்டாடுவது, குறை கூறாமல் இருப்பது, நன்றியுணர்வுடன் இருப்பது, ஆரோக்கியமாக இருப்பது, சிறந்த தாயாக இருப்பது மற்றும் சூர்யாவுடனான நட்பை தொடர்ந்து போற்றுவது உள்ளிட்ட உறுதிமொழிகளை அவர் எடுத்துக்கொண்டதாக பதிவிட்டுள்ளார்.

20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை இவ்வாறு மீண்டும் உறுதிமொழிகளுடன் கொண்டாடிய சூர்யா – ஜோதிகா ஜோடியின் இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது
0
0
0
0
0
0