உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ.25 கோடி மதிப்பில் கோயில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வடக்கு ஆவணி மூல வீதியில் 184 குண்டங்களுடன் பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்காக பிரத்யேக தங்கக் குடங்களும் யாகசாலையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கங்கை, யமுனை, காவிரி, வைகை உள்ளிட்ட பல்வேறு புனித நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீர் கலசங்களில் நிரப்பப்பட்டு யாகசாலை பூஜைகளில் பயன்படுத்தப்பட்டது. கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கிய யாக பூஜைகள் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இன்று அதிகாலை 3.45 மணிக்கு 12ஆம் கால யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 5.45 மணிக்கு யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பட்டன. சிவாச்சாரியார்கள் 12 கோபுரங்கள் மற்றும் தங்க விமானங்களுக்கு கலசங்களை எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து காலை 7.40 மணியளவில் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்களில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற தீபாராதனையை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு தரிசித்தனர். திரண்டிருந்த பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை மேற்பகுதியில் இருந்து காண 9,000 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், நான்கு மாசி வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த குடமுழுக்கு விழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் மதுரையில் திரண்டனர்.
விழாவைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறுகின்றன. கும்பாபிஷேகத்தை நேரில் காண முடியாத பக்தர்களுக்காக இன்று இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளிலும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி உலா நடைபெற உள்ளது.
12 கோபுரங்கள், மதில் சுவர்கள், பொற்றாமரைக் குளம் உள்ளிட்ட கோயிலின் முக்கிய பகுதிகள் சிறப்பு அலங்காரத்தில் ஜொலிக்கும் நிலையில், மதுரை மாநகரமே தற்போது விழாக்கோலம் பூண்டுள்ளது
