அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்கில், இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் ரூ.98.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாகக் கூறி எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக ‘அறப்போர் இயக்கம்’ சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் பணியாளர் துறை இணைச் செயலாளர் சுசீல் குமார் பாட்டீல் காணொளி வாயிலாக ஆஜரானார். அப்போது, கே.எஸ்.கந்தசாமி மற்றும் வி.விஜய கார்த்திகேயன் ஆகிய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் ஏன் இவ்வளவு தாமதம் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய அரசு தரப்பில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அதிக அளவில் இருப்பதால் அவற்றை ஆய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது ஆவணங்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் பதில் கிடைத்த பின்னர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நடைமுறைகளை விரைந்து முடிக்க குறைந்தபட்சம் 2 மாதங்கள் தேவைப்படும் என மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, 2025 நவம்பர் முதல் தற்போது வரை இரு ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், அனுமதி வழங்கும் நடைமுறையை விரைந்து முடித்து, அதன் முடிவை தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை நவம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
0
0
0
0
0
0