முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் திருச்சி இல்லத்தில் இன்று (செப்டம்பர் 16) காலை முதல் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் தென்னூர் அண்ணா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு 20-க்கும் மேற்பட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீட்டைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

6 இடங்களில் சோதனை

அன்பில் மகேஷ் வீட்டைத் தொடர்ந்து, திருச்சி, சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 117 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

வழக்குடன் தொடர்புடையதா?

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதில் முறைகேடு நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாகவே அன்பில் மகேஷ் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சோதனை நடைபெற்று வரும் நிலையில் அன்பில் மகேஷின் வீட்டுக்கு முன்பு திமுகவினர் திரண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சோதனைக்கான முழுமையான காரணங்கள் மற்றும் போலீசார் கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் விவரங்கள் தெரியவரும்.
0
0
0
0
0
0