இந்தியாவில் மீண்டும் Formula 1 Grand Prix போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. இதன் மூலம், 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் Formula 1 கார் பந்தயம் மீண்டும் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவுக்கு நிதி ஆயோக்கின் யுகல் கிஷோர் ஜோஷி தலைமை வகிக்கிறார்.
யார் யார் இடம்பெற்றுள்ளனர்?
இந்தக் குழுவில் மத்திய விளையாட்டு, நிதி, சுற்றுலா அமைச்சகங்கள் மற்றும் CBDT, CBIC ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநில அரசுகளின் பிரதிநிதிகள், கிரேட்டர் நொய்டாவில் உள்ள Buddh International Circuit, சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள Madras International Circuit ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பான FMSCI அமைப்பின் தலைவர் அல்லது பொதுச் செயலாளர் மற்றும் அதன் பரிந்துரையின் பேரில் ஒரு தொழில்நுட்ப நிபுணரும் குழுவில் இடம்பெற உள்ளனர்.
2028 Formula 1 போட்டி சாத்தியமா?
இந்தியாவில் உள்ள தற்போதைய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கட்டமைப்பு, பந்தயத் தடங்கள், பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள், முதலீட்டு வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை குழு ஆய்வு செய்ய உள்ளது.
மேலும் வரி, சுங்கம், சட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளையும் பரிந்துரைக்க உள்ளது.
2028-ம் ஆண்டு இந்தியாவில் Formula 1 Grand Prix நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதும் குழுவின் முக்கியப் பணிகளில் ஒன்றாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 3 முறை நடந்த Formula 1
இந்தியாவில் முதல் Formula 1 Grand Prix 2011-ம் ஆண்டு கிரேட்டர் நொய்டாவில் உள்ள Buddh International Circuit-ல் நடைபெற்றது.
2011, 2012 மற்றும் 2013 ஆகிய மூன்று ஆண்டுகள் தொடர்ந்து Indian Grand Prix நடைபெற்றது. இந்த மூன்று போட்டிகளிலும் Red Bull அணியின் Sebastian Vettel வெற்றி பெற்றார்.
ஆனால் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் Formula 1 போட்டி நடைபெறவில்லை.
ஏன் நிறுத்தப்பட்டது?
Formula 1 போட்டி நிறுத்தப்பட்டதற்கு வரி, சுங்கம், அனுமதி, நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டன.
குறிப்பாக Formula 1 போட்டியை விளையாட்டு நிகழ்வாகக் கருதுவதா அல்லது பொழுதுபோக்கு மற்றும் வணிக நிகழ்வாகக் கருதுவதா என்பது தொடர்பான வரி விவகாரங்களும் சிக்கலை ஏற்படுத்தின.
தற்போதைய உயர்மட்டக் குழுவில் CBDT மற்றும் CBIC பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பது, முந்தைய வரி மற்றும் சுங்கம் தொடர்பான பிரச்சினைகளையும் ஆய்வு செய்யப்பட உள்ளதை காட்டுகிறது.
மீண்டும் Buddh International Circuit-க்கு வாய்ப்பா?
Formula 1 இந்தியாவுக்குத் திரும்பும் பட்சத்தில், ஏற்கெனவே மூன்று முறை Grand Prix போட்டியை நடத்தியுள்ள Buddh International Circuit முக்கியமான தேர்வாக இருக்கலாம்.
எனினும், பந்தயத் தடத்தின் தற்போதைய நிலை, FIA Grade 1 அங்கீகாரம், பாதுகாப்பு வசதிகள், பார்வையாளர்களுக்கான கட்டமைப்பு மற்றும் தேவையான தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் Formula 1 கார் பந்தயம் மீண்டும் நடைபெறுமா? 2028-ஐ நோக்கிய மத்திய அரசின் இந்த ஆய்வின் முடிவில் அதற்கான விடை தெரியவரும்.
