லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தை நடிகை த்ரிஷா பார்வையிட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகை அம்பிகா தெரிவித்த கருத்துகள் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

தமிழக முதலமைச்சர் விஜய் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் நடிகர் அஜித்தும் பங்கேற்றிருந்தார். அப்போது த்ரிஷாவும் அங்கு இருந்த நிலையில், இருவரும் இணைந்து பந்தயத்தைப் பார்வையிட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

த்ரிஷாவுக்கு ஆதரவாக அம்பிகா

த்ரிஷா லண்டன் சென்றது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த நடிகை அம்பிகா, அவர் படப்பிடிப்பு உள்ளிட்ட தனது பணிகளுக்காக லண்டன் சென்றிருக்கலாம் என்றும், அவர் எங்கு செல்கிறார், என்ன செய்கிறார் என்பது குறித்து தேவையின்றி விமர்சிப்பது சரியல்ல என்றும் தெரிவித்தார்.

மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அம்பிகாவின் கருத்துக்கு சேகுவேரா எதிர்ப்பு

இதனிடையே, ‘ஆடுகளம் சினிமா’ யூடியூப் சேனலில் பேசிய பத்திரிகையாளர் சேகுவேரா, த்ரிஷா தொடர்பாக அம்பிகா கருத்து தெரிவித்ததை விமர்சித்தார்.

மேலும், அம்பிகா மற்றும் அவரது சகோதரி ராதா தொடர்பான சொத்து விவகாரம் குறித்து பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பினார். குறிப்பாக, அரசுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்து அவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து அம்பிகா விளக்கம் அளிப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

இவை சேகுவேரா முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் கேள்விகளாகும்.

“அந்த 25 ஏக்கர் ஆவணங்கள் அவரிடம்தான் இருக்கிறது” – அம்பிகா

சேகுவேராவின் பேச்சுக்கு பதிலளித்த அம்பிகா, அவருடைய கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், தமக்கு எம்.ஜி.ஆர் வழங்கியதாகக் கூறப்படும் 25 ஏக்கர் நிலம் தொடர்பான ஆவணங்கள் சேகுவேராவிடமே இருப்பதாக அம்பிகா குற்றம்சாட்டினார்.

அந்த ஆவணங்களைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்த நிலத்தை விற்றால் சகோதரர் என்ற முறையில் அவருக்குரிய பங்கை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அம்பிகா தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் 80-களின் த்ரிஷா என்றால், அப்போது விஜய் யார்?” என சேகுவேராவின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

த்ரிஷா தொடர்பான கருத்தில் தொடங்கிய இந்த விவகாரம், தற்போது அம்பிகா மற்றும் சேகுவேரா இடையேயான பரஸ்பர குற்றச்சாட்டுகளாக மாறியுள்ளது. இருவரது பேச்சுகளும் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.
0
0
0
0
0
0