2026 வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா ஆண்கள் தனிநபர் ரிகர்வ் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

மெக்சிகோவின் சால்டிலோவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை எதிர்கொண்ட 25 வயதான தீரஜ், கடைசி வரை பரபரப்பாக நீடித்த போட்டியில் 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

ஷூட்-ஆஃபில் அசத்தல்!

இரு வீரர்களுக்கும் இடையேயான போட்டி ஐந்து சுற்றுகளிலும் கடுமையாக இருந்தது. முதல் சுற்று 28-28 என சமநிலையில் முடிய, இரண்டாவது சுற்றில் நகானிஷி 29-28 என முன்னிலை பெற்றார்.

மூன்றாவது சுற்றை தீரஜ் 29-28 என கைப்பற்றிய நிலையில், நான்காவது சுற்றில் ஜப்பான் வீரர் 30-28 என வெற்றி பெற்றார். இதனால் போட்டி 5-5 என்ற சமநிலையை எட்டியது.

தொடர்ந்து நடைபெற்ற ஷூட்-ஆஃபில் நகானிஷி 9 புள்ளிகளைப் பெற்ற நிலையில், தீரஜ் துல்லியமாக 10 புள்ளிகளை பதிவு செய்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

காலிறுதி, அரையிறுதியிலும் அதிரடி வெற்றி

தனது முதல் போட்டியில் துருக்கியின் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் பெர்கிம் டுமரை 7-1 என்ற கணக்கில் வீழ்த்திய தீரஜ், அரையிறுதிக்கு முந்தைய சுற்றிலும் அபாரமாக செயல்பட்டார்.

பின்னர் இரண்டு முறை ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரான்சின் ஜீன்-சார்லஸ் வல்லாடோன்ட்டை 7-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கப் போட்டிக்கு முன்னேறினார்.

மறுபுறம், நகானிஷி காலிறுதியில் இத்தாலியின் மௌரோ நெஸ்போலியை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தினார். அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான துருக்கியின் மெட்டே கசோஸை 6-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு வந்தார்.

இரண்டாவது இந்திய வீரர்!

2023 மற்றும் 2024 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் பதக்கம் வெல்லத் தவறிய தீரஜ், இந்த சீசனில் அந்தால்யாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் ஆண்கள் தனிநபர் ரிகர்வ் பட்டத்தை வென்றதன் மூலம் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.

இந்த சீசனில் புவெப்லா, ஷாங்காய், அந்தால்யா மற்றும் மாட்ரிட் ஆகிய உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை, அதில் 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

மேலும், 2007-ம் ஆண்டு துபாயில் பெண்கள் ரிகர்வ் பிரிவில் தங்கம் வென்ற டோலா பானர்ஜிக்கு பிறகு, வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தனிநபர் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை தீரஜ் பொம்மதேவரா பெற்றுள்ளார்.

துல்லியமான அம்பு… வரலாற்று தங்கம்! இந்திய வில்வித்தையில் புதிய அத்தியாயம் படைத்துள்ளார் தீரஜ் பொம்மதேவரா!
0
0
0
0
0
0