பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அண்ணாவின் நினைவுகளைப் போற்றி சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
“தலைநிமிர்ந்த தமிழ்நாடு” – மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், அண்ணா தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதியவர் என்றும், சுயமரியாதை, சமூகநீதி, மாநில உரிமை மற்றும் தமிழ்ப்பற்று ஆகியவற்றில் அவர் என்றென்றும் வாழ்வார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
“தலைநிமிர்ந்த தமிழர், தலைநிமிர்ந்த தமிழ்நாடு” என்ற இலட்சியத்தை நனவாக்கிய மாபெரும் தமிழ்க் கனவு அண்ணா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி, உதயநிதி புகழாரம்
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, அண்ணாவின் பெயரை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதைவிட, அவர் ஏற்றுக்கொண்ட திராவிட, பெரியாரிய மற்றும் தமிழறக் கொள்கைகளை ஆழமாக பின்பற்றுபவர்கள் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வெளியிட்ட பதிவில், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற முழக்கத்துடன் திமுகவை வளர்த்த அண்ணா, தமிழ்நாடு என்ற பெயர் சூட்டியது, சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது, இருமொழிக் கொள்கையை உறுதி செய்தது உள்ளிட்டவற்றை நினைவுகூர்ந்துள்ளார்.
இபிஎஸ்: “அண்ணாவின் அரசியல் வாழ்வு கலங்கரை விளக்கம்”
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களிடையே தன்மான உணர்வை விதைத்து சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் மாநில உரிமைகளை மக்கள் இயக்கமாக வளர்த்தவர் அண்ணா என புகழ்ந்துள்ளார்.
அதிகாரத்தைவிட கொள்கையையும், பதவியை விட மக்களையும் முன்னிறுத்திய அண்ணாவின் அரசியல் வாழ்க்கை தலைமுறைகள் கடந்து வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா: “எனது வழிகாட்டி அண்ணாவே”
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது பதிவில், “அண்ணா” என்ற மூன்றெழுத்து தமிழ்நாட்டின் அரசியலில் புதிய சரித்திரத்தை உருவாக்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
மாநிலக் கட்சிகள் ஆட்சியமைக்க முடியும் என்ற புதிய அரசியல் அத்தியாயத்தை உருவாக்கியவர் அண்ணா என்றும், கூட்டாட்சி, சமூகநீதி, மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், “மக்களிடம் செல்”, “உன்னால் முடியும் தம்பி” போன்ற அண்ணாவின் பிரசார முழக்கங்கள் தன்னை தேர்தல் அரசியல் சிந்தனை நோக்கிப் பயணிக்க வைத்ததாகவும், அண்ணாவே தனது வழிகாட்டி என்றும் ஆதவ் அர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாவின் பிறந்தநாளில் அவரது கொள்கை வழியில் அர்ப்பணிப்புடன் பயணித்து, அவர் கண்ட மாபெரும் கனவுகளை மீட்டுருவாக்க உறுதியேற்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
