சென்னையில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் ஒரே நாளில் 285 குற்றப் பின்னணி மற்றும் சரித்திரப் பதிவேடு கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் சமீப காலமாக அடுத்தடுத்து கொலைச் சம்பவங்கள் நடைபெற்ற நிலையில், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து, செப்டம்பர் 10-ம் தேதி இரவு முதல் செப்டம்பர் 11-ம் தேதி மாலை வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிறப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

எந்த மண்டலத்தில் எத்தனை பேர்?

இந்த சிறப்பு நடவடிக்கையில்,

வடக்கு மண்டலம் – 108 பேர்
மேற்கு மண்டலம் – 38 பேர்
தெற்கு மண்டலம் – 94 பேர்
கிழக்கு மண்டலம் – 45 பேர்

என மொத்தம் 285 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அனைத்து காவல் மாவட்ட துணை ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுக்கள் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சட்டம் ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது குற்றச் செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.
0
0
0
0
0
0