டெல்லியில் நடைபெற்று வரும் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, தெய்வப்புலவர் திருவள்ளுவரின் ‘திருக்குறள்’ நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்பு பிரதியை புதினுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

இரு தலைவர்களின் சந்திப்பில் இந்தியா–ரஷ்யா இடையேயான அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, திறன் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிலவும் ஒத்துழைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பிரிக்ஸ் அமைப்பில் இரு நாடுகளின் ஈடுபாடு, மேற்கு ஆசியா மற்றும் கருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள், கடல்வழி வர்த்தகம் மற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே தீர்வு என்றும், அமைதி முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

புதினுக்கு திருக்குறள் பரிசு!

சந்திப்புக்குப் பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு பரிசளித்தேன். திருக்குறள் தேச எல்லைகளையும் மொழிகளையும் கடந்து திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது, 24-வது இந்தியா–ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபருக்கு திருக்குறள் பரிசு வழங்கிய பிரதமர் மோடியின் செயல், தமிழ் இலக்கியத்தின் உலகளாவிய சிறப்பை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
0
0
0
0
0
0