தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வருகிற மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் வாபஸ் பெறும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

மாநிலங்களவை தேர்தல் – அதிமுக வேட்பாளர் அறிவிப்பு:
அந்த வகையில், அதிமுக தரப்பில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி தரப்பில் சமநிலையை பேணும் வகையிலும், எதிர்கால சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, மார்ச் 16 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படுகிறது.

மேலும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தம்பிதுரை தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.
2
0
1
1
0
0