மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் (மார்ச் 1) பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஜி.கே. வாசன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம். ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசத் தொடங்குவதற்கு முன்பு வெற்றிவேல் வீரவேல் எனக் கூறி உரையைத் தொடங்கினார். பிரதமர் மோடி வெற்றிவேல் எனக் கூற, கூடியிருந்த தொண்டர்கள் வீரவேல் என முழங்கினர். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறினார். முதன்மையாக மதுரை மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் தலை தாழ்ந்து வணங்குகின்றேன் எனக் குறிப்பிட்டுப் பேசத் தொடங்கினார்.
இது பாண்டிய நாடு. வீரம் விளைந்த பூமி. இந்த மகத்தான பூமியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர், மாவீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆகியோரின் வியப்பை ஏற்படுத்தும் தியாகங்களை நினைவு கூர்கிறேன். நீதிக்கும் கண்ணியத்துக்கும் போராடிய இமானுவேல் சேகரனையும் நினைவு கூர்கிறேன் எனக் குறிப்பிட்டு பின்னர் பேசத் தொடங்கினார்.
மதுரையை எம்.ஜி.ஆர் உயிருக்கு உயிராக நேசித்தார், ஆனால் தி.மு.க. மதுரையை ஒருபோதும் விரும்பியதில்லை. மதுரையில் மாபியா அரசியலை அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான். பணம் தி.மு.க.வுக்கு, பிரச்னை மக்களுக்கு என்பதுதான் அவர்களின் 'மாடல்'. தூய்மை மற்றும் சுகாதாரத்தில் மதுரையை அடிமட்டத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார்கள். மணல் திருட்டு, டாஸ்மாக் மற்றும் அரசுப் பணிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் அமைச்சர்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டு நடக்கிறது. ஏழைகளுக்கான மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டங்களை கூட கள ஆய்வு என்ற பெயரில் தி.மு.க. அரசு முடக்கி வைத்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான ஏழைகள் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், போதைப் பொருள் புழக்கமும் அதிகரித்துள்ளதாக வேதனை தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததை மக்கள் நினைவு கூர்கிறார்கள். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் மாபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.
திருப்பரங்குன்றம் கோவிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி, அங்கு தீபம் ஏற்றக் கோரி தீக்குளித்து உயிரிழந்த பக்தர் பூர்ணசந்திரனின் குடும்பத்தினரைச் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். தி.மு.க. அரசின் மனிதநேயமற்ற தன்மையாலேயே இந்தத் துயரம் நடந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தைக் கொண்டுவரும் என மக்கள் நம்புகிறார்கள். தமிழ்நாட்டில் அடுத்து தே.ஜ. கூட்டணி ஆட்சிதான். 2021-ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஊழல் செய்து, குடும்ப ஆட்சி நடத்தி மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. ஒரு துரும்பைக் கூட ஏழைகளுக்காக கிள்ளிப் போடவில்லை தி.மு.க. அரசியலில் நேர்மை என்று வரும்போது ஒட்டுமொத்த நாட்டுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தார் காமராஜர். தி.மு.க இதற்கு நேர்மாறானது. அரசுப் பணி, ஒப்பந்தங்கள் பெறுவது, மணல் திருட்டு, டாஸ்மாக் மோசடி என பல்வேறு மோசடிகளில் திமுக ஈடுபட்டு வருகிறது. நல்ல திட்டங்களைக் கொண்டுவருவதில் அமைச்சர்களிடையே போட்டி இருக்கும். ஆனால், தி.மு.க.வில் மோசடி செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டி. மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது தி.மு.க ஆட்சி.
2004-2015 வரை ஆட்சியில் இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பாம்பன் பாலத் திட்டத்தை கிடப்பில் போட்டிருந்தது. ஆனால், தற்போதைய மத்திய அரசு அதனை நவீனமயமாக்கித் திறந்து வைத்துள்ளது. முந்தைய ஆட்சியில் ரூ.880 கோடியாக இருந்த தமிழக ரயில்வே நிதி, தற்போது 8 மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.7,600 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று புனரமைக்கப்பட்ட 8 ரெயில் நிலையங்களை திறந்து வைத்துள்ளேன். பெங்களூரு- சென்னை, ஐதராபாத்-சென்னை இடையில் புல்லட் ரெயில் திட்டங்கள் வர உள்ளது.
இந்திய-ஐரோப்பிய கூட்டமைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மூலம் தமிழக இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் உலகளாவிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும். தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். இந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகு, மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்ற தி.மு.க.வின் கனவு கானல் நீராக மாறும். தமிழக மக்கள் தி.மு.க.வை விரட்டத் தயாராகிவிட்டனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி மட்டுமே மாற்றத்தைக் கொண்டு வரும் என்று பிரதமர் மோடி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மதுரை மல்லிகைக்கும் தமிழுக்கும் புகழ் பெற்றது என்று பாராட்டிய பிரதமர், கச்சத்தீவு விவகாரம், ஜல்லிக்கட்டு தடை மற்றும் செங்கோல் நிறுவியது போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி தமிழக கலாச்சாரத்தின் காவலனாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கும் என உறுதி அளித்தார்.
