இடதுசாரி இயக்கங்களின் போராட்டங்களில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட்டதாகவும், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் சிபிஎம், சிபிஐ உறுப்பினர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டதாகவும் கூறப்படும் விவகாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினரின் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை அரசியலமைப்பு வழங்கியுள்ள போராட்ட உரிமையை மறுப்பதாகவும், சட்டவிரோதமானதாகவும் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

“தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”

அரசியல் அமைப்புகள் மட்டுமின்றி எந்தவொரு அமைப்புக்கும் ஜனநாயக முறையில் போராடும் உரிமை உள்ளது எனக் குறிப்பிட்ட பெ. சண்முகம், அந்த உரிமையை ஒடுக்க பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், சம்பந்தப்பட்ட இணை இயக்குநரிடம் மட்டும் விளக்கம் கேட்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் மன்னிப்பு கோரியிருந்தாலும், தங்களது கோரிக்கை மன்னிப்பு அல்ல என்றும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

குஜிலியம்பாறை வட்டாட்சியர் விவகாரம்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்தப் பகுதியில் உள்ள சிபிஎம் மற்றும் சிபிஐ கட்சி உறுப்பினர்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது அச்சுறுத்தல் மட்டுமல்லாமல், அரசியலமைப்புக்கு எதிரான செயல் என்றும், அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

வட்டாட்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காமல், அரசு ஊழியர் நடத்தை விதிகளின் 17-A பிரிவின் கீழ் விளக்கம் கேட்பது, இந்த விவகாரத்தை சிறிய தவறாக அரசு அணுகுவதைப் போன்றுள்ளது என்றும் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார்.

“அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியிருந்தால் அது கடுமையான குற்றம்”

வட்டாட்சியரின் நடவடிக்கைக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்றும், தனிப்பட்ட விருப்பு–வெறுப்பின் அடிப்படையிலேயே அவர் சுற்றறிக்கை அனுப்பியதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் கூறியிருந்ததை பெ. சண்முகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசுப் பதவியில் இருக்கும் ஒருவர் தனிப்பட்ட நோக்கத்திற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தியிருந்தால், அது ‘அதிகார துஷ்பிரயோகம்’ எனக் குறிப்பிட்டுள்ள அவர், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பாதுகாக்கும் முயற்சியாகவே கருதப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

முதல்வரிடம் கறார் கோரிக்கை

இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் நேரடியாகத் தலையிட்டு, தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாட்சியர் உள்ளிட்ட தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மேலும், தலைமைச் செயலாளர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை ரத்து செய்வதுடன், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சுற்றறிக்கையை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் முதல்வரிடம் கறார் கோரிக்கை விடுத்துள்ளது.
0
0
0
0
0
0