நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இயற்கைப் பேரழிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பனிப்பாறைகள் சரிந்து, ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.மேலும், 133 இந்தியர்கள் உட்பட 750-க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அடுத்தடுத்த பேரழிவு
ஆகஸ்ட் 26-ஆம் தேதி திபெத் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ரிக்டர் அளவுகோலில் 4.4 முதல் 5.2 வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கத்தின் தாக்கத்தால் மலைப்பகுதிகளில் இருந்த பனிப்பாறைகள் சரிந்து ஆறுகளின் நீரோட்டத்தைத் தடுத்ததாகவும், இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்த நிலையில், திடீரென ஏற்பட்ட உடைப்பால் பெரும் வெள்ளம் உருவானதாகவும் கூறப்படுகிறது.
கடும் வேகத்தில் சீறிப்பாய்ந்த வெள்ளம் வழியிலிருந்த பல கிராமங்களை மூழ்கடித்துள்ளது. வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ளதுடன், பல பகுதிகளுக்கான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.கைலாய யாத்திரை சென்றவர்களும் சிக்கினர் இந்த இயற்கைப் பேரழிவில் கைலாய யாத்திரைக்காக காத்திருந்த சுற்றுலாப் பயணிகளும் சிக்கியுள்ளனர். அவர்களில் பலரின் நிலை குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.இதனால் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப் பணியில் நேபாளம் – இந்தியா
பேரழிவைத் தொடர்ந்து நேபாள அரசு முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்தியாவும் நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப்படை விமானங்கள் நேபாளத்தில் முகாமிட்டு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றன.
750-க்கும் மேற்பட்டோர் நிலை என்ன?
157 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், 133 இந்தியர்கள் உட்பட 750-க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பது கவலையை மேலும் அதிகரித்துள்ளது.மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களின் நிலை குறித்த தகவல்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.நேபாளத்தை உலுக்கிய இந்தப் பெருவெள்ளப் பேரழிவில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது
