கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் இன்று (ஆகஸ்ட் 26) ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். வீடுகளில் வண்ணமயமான பூக்கோலங்கள், சிறப்பு உணவுகள் மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் ஓணம் களைகட்டியுள்ளது.இதையொட்டி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் விஜய் வாழ்த்து

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், உலகம் முழுவதும் வாழும் மலையாள மக்களுக்கு இதயங்கனிந்த ஓணம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஓணம் என்பது கேரளத்தின் அறுவடைத் திருநாள் என்றும், இந்த நன்னாளில் மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வண்ணமயமான பூக்கோலம்போல் அனைவரது வாழ்க்கையும் பொலிவுடன் அமைய வேண்டும் என்றும், அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் ஓணம் அனைவரது வாழ்விலும் நலத்தையும் வளத்தையும் வழங்கட்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய சமத்துவம்

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.ஓணம், மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த காலத்தின் நினைவைப் புதுப்பிக்கும் திருநாள் எனக் குறிப்பிட்ட அவர், பிறப்பால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ இல்லை என்றும், அனைவருக்குமான சமத்துவமே இலக்கு என்றும் தெரிவித்துள்ளார்.மகாபலியை தோல்வியடைந்த மன்னராகப் பார்க்காமல், மக்களின் மனதில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகத் திகழ்ந்த மன்னராகக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்தில், அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற செய்தியை ஓணம் உலகிற்கு உணர்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் அவர் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரன் வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் மலையாள மக்களுக்கு ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மகாபலி மன்னரின் நல்லாட்சி மற்றும் சமத்துவத்தை நினைவுகூரும் இந்தத் திருநாள், ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி, அன்பு, ஆரோக்கியம், அமைதி மற்றும் செல்வச் செழிப்பை பெருக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் பதிவில் மிலாது நபி வாழ்த்து

இதனிடையே, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதளப் பதிவில் மிலாது நபி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.பசித்தவர்களுக்கு உணவளித்தல், ஏழை எளிய மக்களிடம் கருணை காட்டுதல், எண்ணத்திலும் நடத்தையிலும் தூய்மையாக இருத்தல், சகோதரத்துவத்துடன் வாழ்தல் உள்ளிட்ட நபிகள் நாயகத்தின் போதனைகளைப் பின்பற்றி வாழ வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அன்பு, அமைதி, மனிதநேயம் மற்றும் சகோதரத்துவம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஓணம் திருநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் மலையாள மக்களின் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.
0
0
0
0
0
0