தவெக மூத்த அமைச்சர் செங்கோட்டையன், மதிமுக குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ பதிலளித்துள்ளார். செங்கோட்டையனின் பேச்சு மதிமுகவினரை புண்படுத்திவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “மதிமுகவில் தலைவர்கள் மட்டும்தான் உள்ளனர்; அதேபோல அதிமுகவின் நிலைமையும் விரைவில் ஆகிவிடும்” என விமர்சித்திருந்தார்.இந்தப் பேச்சு மதிமுக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு மதிமுக பொருளாளர் செந்திலதிபதியும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

“செங்கோட்டையனை மூத்த அரசியல் தலைவராக பார்க்கிறேன்”

இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, செங்கோட்டையன் குறித்து பேசுகையில், “அவரை தவெகவின் அமைச்சராக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகவே பார்க்கிறேன்” என்றார்.மேலும், செங்கோட்டையன் தன்னுடைய தந்தை வைகோ மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், தானும் அவரை பலமுறை சந்தித்துள்ளதாகவும் துரை வைகோ குறிப்பிட்டார்.

“மதிமுகவினர் புண்பட்டுள்ளனர்”

தொடர்ந்து பேசிய அவர், தவெக தலைமையில் ஏற்பட்ட மாற்றத்தை மதிமுக வரவேற்பதாகவும், அதன் காரணமாகவே தவெக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
“இதற்காக எங்களுடைய 2 எம்.எல்.ஏக்களை இழந்துள்ளோம். இந்த நிலையில் செங்கோட்டையன் அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சு மதிமுகவினரை புண்படுத்திவிட்டது” என துரை வைகோ கூறினார்.

“வேண்டும் என்றே பேசியிருக்க வாய்ப்பில்லை”

அதேநேரத்தில், செங்கோட்டையன் வேண்டும் என்றே மதிமுகவை புண்படுத்தும் நோக்கில் பேசியிருப்பார் என தான் கருதவில்லை என்றும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
“அவர் வாய்தவறி கூட பேசியிருக்கலாம். வேண்டும் என்றே இப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை” என அவர் தெரிவித்தார்.செங்கோட்டையனின் கருத்தால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு துரை வைகோ அளித்துள்ள இந்தப் பதில், தவெக–மதிமுக இடையிலான அரசியல் உறவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0
0
0
0
0