தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 24) பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக எழுந்த லஞ்சக் குற்றச்சாட்டு, ஆளும் தரப்பு மற்றும் திமுக இடையே கடும் அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் சில இடங்களில் கட்டாயப்படுத்தி பணம் பெறப்பட்டதாக குற்றம்சாட்டினார்.“கடந்த ஆட்சியில் சில இடங்களில் கட்டாயப்படுத்தி பணம் வாங்கினார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். இதற்கு ஆதாரம் கேட்கிறார்கள். நானே அதற்கு நேரடி சாட்சி. எந்த இடத்தில், எந்த நேரத்தில், எவ்வளவு பணம் பெறப்பட்டது என்பதைக் கூட என்னால் துல்லியமாகச் சொல்ல முடியும். சென்னை தியாகராய நகரில் வைத்து யார் மூலமாக பணம் பெறப்பட்டது என்பதையும் கூற முடியும். இதற்காக என் மீது என்ன வழக்கு போட்டாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.
அன்பில் மகேஷ் கடும் மறுப்பு
மரிய வில்சனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனடியாக பதிலளித்துள்ளார்.“ஒரு அமைச்சராக பொறுப்பு வகித்துக்கொண்டு, நானே லஞ்சம் கொடுத்தேன் என்று கூறுவது முற்றிலும் தவறானது. இதேபோன்ற குற்றச்சாட்டு ஏற்கனவே என்மீது வைக்கப்பட்டது. அதற்காக ரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த விவகாரத்தில் விசாரணையும் நடைபெற்று வருகிறது” என அவர் கூறினார்.மேலும், “தான் லஞ்சம் கொடுத்ததாக ஒரு அமைச்சர் கூறுகிறார் என்றால், முதலில் அவரிடம்தான் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்” என அன்பில் மகேஷ் வலியுறுத்தினார்.இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அமைச்சரை அழைத்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“அரசின் தவறுகளை மறைக்க மடைமாற்ற அரசியல்”
தன்னை திட்டமிட்டு அவதூறு செய்வதாக குற்றம்சாட்டிய அன்பில் மகேஷ், “அரசு செய்யும் தவறுகளை மறைக்கவே இதுபோன்ற மடைமாற்ற அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்” என விமர்சித்தார்.இதனால், நிதியமைச்சர் மரிய வில்சன் முன்வைத்த லஞ்சக் குற்றச்சாட்டும், அதற்கு அன்பில் மகேஷ் அளித்த பதிலும் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அடுத்தகட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்படுமா? அமைச்சர் மரிய வில்சனிடம் விசாரணை நடைபெறுமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
.jpeg)