தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது, திமுக – தவெக இடையே கூட்டணி ஆதரவு, தேர்தல் வெற்றி, காங்கிரஸ் பங்களிப்பு உள்ளிட்ட விவகாரங்களை மையமாக வைத்து காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.தவெக ஆட்சி அமைந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவே காரணம் என்றும், திமுக கூட்டணியின் வெற்றியை தவெக தரப்பு குறைத்து மதிப்பிடுவதாகவும் திமுக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த தவெக தரப்பு, “தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வென்றுள்ளோம்” என பதிலடி கொடுத்தது.
“திமுக தொண்டர்களின் வாக்குகளால்தான் வெற்றி”
விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ கோவி. செழியன், மேலூர் போன்ற பொதுத் தொகுதிகளில் திமுக தொண்டர்களின் வாக்குகள், திமுக தலைவர்களின் பிரச்சாரம் மற்றும் திராவிட இயக்கத்தின் கொள்கைகள் உள்ளிட்டவை வெற்றிக்கு காரணமாக அமைந்ததாகக் கூறினார்.மேலும், சமூகப் பாகுபாடுகளை கடந்து கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை உருவாக்கியதில் பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் திராவிட இயக்கத்தின் பங்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“108 தொகுதிகளில் தனித்து வென்றது தவெக!”
இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை “நாங்கள்தான் வெற்றி பெற வைத்தோம்” என்று திமுக தரப்பினர் கூறி வருவதாக விமர்சித்தார்.அதே நேரத்தில், தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்தார்.மேலும், 23 கட்சிகள் அடங்கிய கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும், சென்னையில் இரண்டு தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
“தைரியம் இருந்தால் அடுத்த தேர்தலில் தனித்து நின்று 50 இடங்களில் வெற்றி பெற்றுக் காட்டுங்கள்” என ஆதவ் அர்ஜுனா சவால் விடுத்தார்.இந்தக் கருத்துக்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.“பூஜ்ஜியத்திலிருந்து மீண்டு வந்த இயக்கம் திமுக”இதற்குப் பதிலளித்த கோவி. செழியன், ராஜீவ் காந்தி மறைவுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் திமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்ததை சுட்டிக்காட்டினார்.“பூஜ்ஜியத்திலிருந்து மீண்டு வந்த இயக்கம் திமுக. எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.இதனால் அவையில் மீண்டும் விவாதம் சூடுபிடித்தது.
“ரோஷம் இருந்தால் காங்கிரஸை வெளியே அனுப்புங்கள்!”
தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ கே.என். நேரு, தவெக ஆட்சி அமைந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவும் காரணம் என்று குறிப்பிட்டார்.
அப்போது அவர்,“திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவால்தான் இன்று தவெக ஆட்சியில் இருக்கிறது. அவ்வளவு ரோஷம் இருந்தால் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, தனியாக நின்று ஆட்சி நடத்துங்கள்”என்று கடுமையாக பதிலடி கொடுத்தார்.இந்தப் பேச்சு பேரவையில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.“யாரும் யாருக்கும் அடிமை இல்லை!”கே.என். நேருவின் விமர்சனத்துக்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா,
“இங்குள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தனித்துவமான அடையாளம் உள்ளது. யாரும் யாருக்கும் அடிமை இல்லை” என்றார்.
மேலும், தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி முடிவுக்கு வரும் என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.“காங்கிரஸின் பங்களிப்பை மறக்கக்கூடாது!”இதனிடையே காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் விவாதத்தில் இணைந்தார்.காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரை உள்ளிட்ட நடவடிக்கைகளால் திமுகவுக்கு நாடாளுமன்றத்தில் அதிக இடங்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.மேலும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலங்களில் திமுகவுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதையும் அவர் நினைவுபடுத்தினார்.“22 ஆண்டுகள் நாங்கள் உங்களுடன் பயணித்தோம். உங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தந்தோம். இன்று எங்களுக்கான ஆட்சி வரும்போது அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்று தாரகை கத்பட் தெரிவித்தார்.
“ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது திமுக!”
இதற்குப் பதிலளித்த கே.என். நேரு, இந்தியா முழுவதும் காங்கிரஸ் யாத்திரை மேற்கொண்டிருந்தாலும், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அதிகமான இடங்கள் வழங்கப்பட்டதாகக் கூறினார்.
மேலும், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது திமுகதான் என்றும் அவர் தெரிவித்தார்.இதனால், திமுக – காங்கிரஸ் இடையேயான கூட்டணி பங்களிப்பு குறித்த விவாதமும் பேரவையில் சூடுபிடித்தது.“11 அமைச்சரவைப் பதவிகளை பெற்றது காங்கிரஸ்!”இதற்கிடையே அமைச்சர் செங்கோட்டையனும் விவாதத்தில் கருத்து தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் 11 பதவிகள் கிடைத்ததையும், அதற்கு திமுக அளித்த ஆதரவு மற்றும் கூட்டணி அரசியல் காரணமாக இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.இதனால், “யார் யாருடைய ஆதரவால் ஆட்சிக்கு வந்தார்கள்?” என்ற விவகாரம் பேரவையில் முக்கிய விவாதமாக மாறியது.சபாநாயகர் தலையிட்டு முற்றுப்புள்ளிஉறுப்பினர்களுக்கு இடையேயான வாக்குவாதம் தொடர்ந்து தீவிரமடைந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலையிட்டார்.
“தேர்தலில் வெற்றியும் தோல்வியும் மக்களால் தீர்மானிக்கப்படுவது. எனவே, இதர விவாதங்களைத் தவிர்த்து அவை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று உறுப்பினர்களிடம் கேட்டுக்கொண்டார்.இதையடுத்து கூட்டணி பலம், தனிப்பெரும்பான்மை, காங்கிரஸ் ஆதரவு, 108 தொகுதிகள் என தொடர்ந்து நீடித்த காரசார விவாதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
???? பேரவையில் எழுந்த முக்கிய கேள்வி:
“தவெக ஆட்சி யாருடைய ஆதரவால் உருவானது?” என்ற கேள்வியில் தொடங்கிய இந்த விவாதம், “யாருக்கு யாருடைய கூட்டணி தேவை?” என்ற அரசியல் மோதலாக மாறியது.திமுக – தவெக – காங்கிரஸ் என மூன்று தரப்பினரும் தங்களது கூட்டணி பங்களிப்பை முன்வைத்த நிலையில், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் இந்த வார்த்தைப் போர் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பதே தற்போது அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
.jpeg)