கர்நாடக மாநிலம் ஹானூர் வனப்பகுதி அருகே தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் இன்று மீண்டும் எதிரொலித்தது. இந்த சம்பவம் தொடர்பாக கர்நாடக காவல்துறையின் விசாரணைக்கு பதிலாக உயர்மட்ட நீதி விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஹானூர் வனப்பகுதி அருகே கடந்த 15-ஆம் தேதி அதிகாலையில் அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர், ஜெபாஸ்டின், டேவிட் குமார் ஆகியோர் கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குறிப்பிட்டார்.

“பிரேதப் பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது”

இந்த சம்பவம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளதாக தெரிவித்த உதயநிதி, அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் இருப்பதாக கூறினார்.மூவரும் சித்திரவதை செய்யப்பட்டு, மிக அருகில் நிற்கவைக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவர்களின் உடல்களில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், விலா எலும்புகள் முறிக்கப்பட்டிருந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இதனைத் தொடர்ந்து, “இது முழுக்க முழுக்க ஒரு படுகொலை” எனக் கூறிய உதயநிதி, இந்த சம்பவத்தில் தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.

“கர்நாடக அரசிடம் விளக்கம் கேட்டீர்களா?”

“குறைந்தபட்சம் கர்நாடக மாநில அரசிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதா? கர்நாடக முதல்வர் சமீபத்தில் தென் மண்டல மாநாட்டிற்காக தமிழகம் வந்தபோது, நேரிலாவது தமிழக அரசு தனது கண்டனத்தை தெரிவித்ததா?” என உதயநிதி கேள்வி எழுப்பினார்.மேலும், கர்நாடக காவல்துறையே விசாரணை நடத்துவதற்குப் பதிலாக உயர்மட்ட நீதி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“தமிழர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்”

சம்பவம் நடைபெற்ற உடனேயே முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ கர்நாடகாவுக்குச் சென்று உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும் என்றும் உதயநிதி தெரிவித்தார்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான நிதியுதவி மற்றும் சட்ட உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.“மூன்று தமிழர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க தமிழக அரசு முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்” என சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தற்போது முக்கிய எதிர்பார்ப்பாகியுள்ளது.
0
0
0
0
0
0