ஆளுநர் ரவி, குஷ்பு உள்ளிட்டோர் குறித்து அவதூறாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது. மேலும் இவ்வழக்கில் அவருக்கு ரூ.20,000 அபராதம் விதித்த நீதிமன்றம், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை கொடுங்கையூரில் கடந்த 2023இல் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ரவி மற்றும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சு இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உத்தரவிட்டார். பின்னர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததையடுத்து திமுகவில் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

3
2
0
0
0
1