மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திருச்சிராப்பள்ளி மத்திய மக்கள் தொடர்பு அலுவலகம் ஒருங்கிணைந்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் அந்தநல்லூர் கிராமத்தில் நடைபெற்றது. 

திருச்சிராப்பள்ளி மத்திய மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் அருண்குமார் அனைவரையும் வரவேற்றார். தஞ்சாவூர் மத்திய மக்கள் தொடர்பு அலுவலகத்தின் கள விளம்பர உதவியாளர் ரவிந்திரன் நிகழ்ச்சி குறித்து விளக்க உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றிய மத்திய மக்கள் தொடர்பகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குனர் பாலநாகேந்திரன், நாடு முழுவதும் இது போன்ற ஒருங்கிணைந்த விழிப்புணர்வு  நிகழ்ச்சியினை மத்திய மக்கள் தொடர்பகம்  நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு அரசு திட்டங்களை பற்றிய  விழிப்புணர்வை குறிப்பாக கிராமப்புற மக்கள் பெற வேண்டும் என்றும் அரசின் திட்டங்களை பயன்படுத்தி பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர் நித்யா அங்கன்வாடி மையத்தின் மூலம் குழந்தைகளுக்கு வளர் இளம் பெண்களுக்கு மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆற்றக்கூடிய பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.  

குழுமணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜராஜன் புற்றுநோய் சர்க்கரை நோய் இரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் அதற்கான மருத்துவ முறைகள்  மற்றும் தொற்று நோய்கள் பற்றி எடுத்துரைத்தார். 

அந்தநல்லூர் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கிரிஜா குழந்தையின் வாழ்நாள் முழுமைக்குமான ஆரோக்கியம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு முதல் ஆயிரம் நாட்களில் வழங்கப்படும் ஊட்டச்சத்தே அடித்தளமாகும், எனவே முறையான கர்ப்பகால பராமரிப்புடன் குழந்தையின் முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். ஆறு மாதத்திற்குப்பின் இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் கூடுதலாக இணை உணவு வழங்க வேண்டும் என்று கூறினார். 

அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்  சண்முகம் ஜல்  ஜீவன் அபியான் திட்டம், திடக்கழிவு மேலாண்மை மற்றும் நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வேண்டியதன் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.  

சமூக நல துறையின் விரிவாக்க அலுவலர் சாவித்திரி சமூகநலத் துறையில் செயல்படுத்தப்படும் திருமண உதவி மற்றும் பல்வேறு  திட்டங்களைபற்றி எடுத்துரைத்தார்.

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் தூய்மை இந்தியா ஒருங்கிணைப்பாளர் சங்கீதா மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பைகளை பொதுமக்கள் பிரித்து கொடுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், கழிவறை கட்ட அரசு வழங்கும் ஊக்கத்தொகை பற்றியும் விளக்கினார். 

மேலும் ஆரோக்கிய குழந்தை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு அரசு திட்டங்கள் குறித்த விளக்க பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் பதிவு பெற்ற கலை குழுவினரால் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிறைவாக அந்தநல்லூர் ஊராட்சி செயலர் செந்தில்குமார்  நன்றியுரை ஆற்றினார்.

0
0
2
0
0
0